சென்னை,
தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் தங்களது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்த திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன்பின்னர் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வாக்களித்தார்.
பின்னர் அதே வாக்குச்சாவடியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா உதயநிதி, மகன் இன்பநிதி ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
தனது மயிலாப்பூர் தொகுதியில் உள்ள ஆழ்வார்ப்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து நலம் விசாரித்தார்.
வாக்களித்தபின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில், “நான் எப்படி ஜனநாயக கடமை ஆற்றியிருக்கிறோனோ, அதேபோல் தமிழக மக்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். தமிழ்நாடு வெல்லும்” என்று கூறினார்.