கோவை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் 3,563 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நேரில் சென்று வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தேர்தலை முன்னிட்டு பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வனத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் “வெள்ளியங்கிரி மலைக்கு இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை செல்ல அனுமதி இல்லை. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை வழக்கம் போல வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்லலாம்.
இந்த உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தடையை மீறி வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதை தடுக்க வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தடையை மீறும் நபர்கள் மீது இந்திய வனச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் தடை செய்யப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல முயற்சியும் செய்ய வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.