தமிழக செய்திகள்

2 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது: 4 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம்

2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. 4 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

32 துறைகளின் மானியக் கோரிக்கை முடிந்தது

தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது. இந்த நிலையில், 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 32 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.

4 துறைகள் மீது விவாதம்

இந்த நிலையில், கடந்த 2 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

முதல்-அமைச்சரின் துறை

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சரான முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் ஆகியோர் பதில் அளித்து பேசுகிறார்கள். விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக, தங்களது துறை சார்ந்த அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட இருக்கின்றனர்.