சென்னை,
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. தமிழக பொறுப்பு கவர்னரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தனது உரையை ஆங்கிலத்தில் பேசினார்.
அவர் பேசி முடித்ததும், கவர்னர் உரையை தமிழில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் இன்றைய சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.
தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், "வரும் 22-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும். 23-ந் தேதி பதில் உரை இடம்பெறும்.
நாளை (19-ந் தேதி) முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். மூத்த தலைவர்கள் மறைவுக்கும் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்படும். சனி, ஞாயிறு விடுமுறை. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் கேள்வி நேரம் இருக்காது. சட்டசபை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை" என்றார்.
இந்த அலுவல் ஆய்வுக்குழுவில் முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல்குமார், ராஜேஷ்குமார், வன்னியரசு, அரசு தலைமைக் கொறடா சபரிநாதன், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் (தி.மு.க.), எ.வ.வேலு (தி.மு.க.), எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.), ஓ.எஸ்.மணியன் (அ.தி.மு.க.), சவுமியா அன்புமணி (பா.ம.க.), செல்லசுவாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), சையது பாரூக் பாஷா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.