கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகள்: வெளிப்படையான தீர்வு தேவை - மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி

உதவிப் பேராசிரியர்கள் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் எழுந்துள்ளதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் தேர்வு முடிவுகளில் பெரும் குளறுபடிகள் எழுந்துள்ளதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

தேர்வுத் தாள் 2-ன் மதிப்பீட்டு நடைமுறை குறித்த ஐயங்கள், கசிந்துள்ள செய்திகள், மதிப்பெண் வழங்கலில் வெளிப்பட்டுள்ள தர்க்க ரீதியாக பொருந்தாத முரண்பாடுகள், தேர்வு வெளிப்படைத் தன்மையின்மை ஆகியன ஆயிரக்கணக்கான தேர்வர்களிடையே நம்பிக்கையின்மையை உருவாக்கியுள்ளன. இத்தகைய நிலைமை உயர்கல்வி அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை, தேர்வர்களின் ஊக்கத்தைப் பாதிக்கும்.

தேர்வுத் தாளை குறிப்பாக இரண்டாம் பகுதியை மறுமதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டும். மதிப்பீட்டு நடைமுறை, அளவுகோல்கள், மதிப்பெண் சீரமைப்பு ஆகியன வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு அவர்களின் மதிப்பெண், கட் ஆஃப் விவரங்கள் ஆகியவை தெரிவிக்கப்பட வேண்டும். மறுஆய்வு நிறைவடையும் வரை பணி நியமன நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே பணி நியமனங்கள் 12 ஆண்டுகளாக இல்லாத சூழலில் இத்தகைய முடிவுகள் தாமதமின்றி விரைந்து முடிக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இத்தகைய தேர்வுகள் வெளிப்படையான, நிபுணத்துவ அடிப்படையிலான மற்றும் கண்காணிக்கக்கூடிய மதிப்பீட்டு முறையுடன் நடத்தப்பட வேண்டும்.

அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் 9,000 உள்ளன. 4,000 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டாலும், தற்போது 2,708 காலியிடங்களுக்கு மட்டுமே நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணிநியமனத்தின் போதும் காத்திருப்பு பட்டியல் உருவாக்கப்பட்டு பின்னர் ஏற்படும் காலியிடங்கள், புதிய அறிவிக்கைக்கான காலதாமதத்தை தவிர்த்து, அந்த பட்டியலில் இருந்து நியமனம் செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும்.

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடைபெறும் ஆசிரியர் நியமனங்களிலும் வெளிப்படைத்தன்மை, சமூகநீதியை நிலை நாட்டுதல் மற்றும் ஊழல் தடுப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக உண்மை நிலையை அறிய மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும்; உதவிப் பேராசிரியர் நியமனங்களில் எழுந்துள்ள பிரச்சினை மீது விரைவான விசாரணை நடத்தி முறைகேடுகள் இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்வு முடிவுகள் பற்றிய ஐயங்கள் தெளிவுப்படுத்தப்பட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.