கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

திருமணம் செய்வதாக கூறி பரிகாரம் கேட்க வந்த இளம்பெண்ணுடன் உல்லாசம் - ஜோதிடர் மீது புகார்

கட்டாயப்படுத்தி பலமுறை உல்லாசம் அனுபவித்தார் என்று இளம்பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்,

பரிகாரம் செய்ய வந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக ஜோதிடர் மீது திருப்பூரை சேர்ந்த இளம்பெண் புகார் தெரிவித்து உள்ளார்.

இளம்பெண் புகார்

திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண், கோவையில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதியை சந்தித்து புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூரை சேர்ந்த நான், அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். எனக்கு பெற்றோர் திருமண வரன் பார்த்து வந்தனர். எனக்கு விரைவில் திருமணமாக வேண்டி ஜோதிடர்களை அணுகி பல்வேறு கோவில்களில் வேண்டுதல் மற்றும் பரிகாரம் செய்து வந்தனர்.

பரிகாரம் செய்ய சொன்னார்

இந்த நிலையில் கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 32 வயது ஜோதிடர், திருமண தடை நீங்க பரிகாரங்களை தெளிவாக கூறுவார் என்று எனது நண்பர் கூறினார். இதனால் நானும், எனது தோழியும் நரசிம்மநாயக்கன்பாளையம் சென்று அந்த ஜோதிடரை சந்தித்தோம். அப்போது அவர் தொடர்ந்து 3 வாரங்கள் செவ்வாய்க்கிழமை காலையில் மட்டும் விரதம் இருந்து வழிபாடு செய்தால் கண்டிப்பாக திருமணமாகும். அந்த பரிகாரத்தை செய்துவிட்டு தன்னை தனியாக வந்து சந்திக்குமாறு கூறினார்.

அதன்படி பரிகாரங்களை செய்து விட்டு நான், அந்த ஜோதிடரை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் மேலும் சில பரிகாரங்களை கூறினார். அதற்கு நான் இன்னும் எவ்வளவு நாள் பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் விரைவில் உன்னை தேடி வரன் வரும் என்றார்.

திருமணம் செய்வதாக உறுதி

மேலும் அவர், என்னை தேடி எத்தனை இளம்பெண்கள் வந்தாலும், நீ என்னை பார்க்க வரும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உன்னை மிகவும் பிடித்து இருப்பதால் தான் அடிக்கடி வரச்சொன்னேன். எனவே நானே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறினார்.

அதோடு என்னை கட்டாயப்படுத்தி பலமுறை உல்லாசம் அனுபவித்தார். அத்துடன் அவசர தேவை என்று என்னிடம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணம் வாங்கினார். திடீரென்று அவருடைய நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

அதுகுறித்து அவரிடம் கேட்டபோது, சரியாக பதில் அளிக்காததுடன் இனிமேல் இங்கு வரக்கூடாது என்று என்னை துரத்திவிட்டார். ஏற்கனவே திருமணமானதை மறைத்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னை பலாத்காரம் செய்த ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட ஐ.ஜி. இதுதொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.