தமிழக செய்திகள்

கழுகுமலையில் ஆட்டோ டிரைவரை தாக்கிய ஜோதிடர் கைது

கழுகுமலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வழக்கம்போல தனது ஆட்டோவை அங்குள்ள ஒரு ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்த முயன்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை ஆறுமுகநகரைச் சேர்ந்த குருசாமி மகன் மாரியப்பன் (வயது 72). ஆட்டோ டிரைவரான இவர் வழக்கம்போல தனது ஆட்டோவை ஒரு திருமண மண்டபம் அருகேயுள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்த முயன்றுள்ளார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த பைக்கை ஓரமாக வேறு இடத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளார்.

அப்போது அவருக்கும் அந்த பைக்கின் உரிமையாளரான செல்வராஜ் மகன் ஜோதிடர் தொழில் செய்து வரும் சண்முகராஜ்(எ) சசிக்கும்(50) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சண்முகராஜ், மாரியப்பனை அவதூறாக பேசி தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் கழுகுமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிடரை கைது செய்தனர்.