தமிழக செய்திகள்

துணை ஜனாதிபதி பங்கேற்கும் விழா; தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்.பி.

நடைமுறை மாற்றப்பட்டால் காங்கிரஸ் அமைச்சர் விழாவில் பங்கேற்க மாட்டார் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தமிழகம் வருகை தந்து, இன்று திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழாவிலும், அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மாணிக்க மற்றும் வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். துணை ஜனாதிபதியை பெருமையுடன் வரவேற்கிறோம்.

அரசு மரபின் அடிப்படையில் அவரை வரவேற்று, உபசரிப்புகளைக் கவனித்து, வழியனுப்பும் வரை உடன் செல்வதற்காக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விசுவநாதனை தமிழக அரசு நியமித்துள்ளது.

​அதேசமயம் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதன் பிறகே மற்ற பாடல்கள் இசைக்கப்பட வேண்டும். இந்த நடைமுறை மாற்றப்படுமேயானால், அந்த நிகழ்ச்சிகளின் மேடைகளில் காங்கிரஸ் சார்ந்த தமிழக அமைச்சர் அமரமாட்டார்; நிகழ்விலும் பங்கேற்க மாட்டார் என்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

​அரசியல் சட்டம் உருவாக்கியுள்ள மிக உயர்ந்த பொறுப்புக்களில் ஒன்றான இந்திய குடியரசின் துணைத் தலைவர் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதிலும் தமிழக காங்கிரஸ் கவனமாக இருக்கும். அதே வேளையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் மாண்பை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்!”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.