தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சோலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமணி என்பவரின் 17 வயது மகள், செபத்தையாபுரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவினரான காசிபாண்டியன் என்பவரின் மகன் முத்துராஜ் (23) என்பவரும், அந்த மாணவியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த மாணவி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், மாணவியிடம் இது குறித்துக் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த முத்துராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியைக் குத்தியதுடன், துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
மாணவியைக் கொலை செய்த பிறகு அங்கிருந்து தப்பியோடிய முத்துராஜ், அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்துத் தகவலறிந்த சாயர்புரம் காவல் நிலையப் பொறுப்பு ஆய்வாளர் ஆதாம் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
உயிரிழந்த மாணவியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த முத்துராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இக்கொலைச் சம்பவம் குறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.