தேனி,
தேனியில் போதைக் கும்பல் தாக்குதலில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொருளாளர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேனி மாவட்டம் அல்லிநகரம் காவல் நிலையச் சிறப்பு உதவி ஆய்வாளர், சமதர்மபுரம் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக நடுரோட்டில் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த நபர்களைத் தட்டிக்கேட்ட காரணத்திற்காக, மதுபோதையில் இருந்த சமூக விரோதக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கடமை தவறாமல் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நின்ற காவல் அதிகாரியைத் தாக்கிப் படுகொலை செய்த அந்த சமூக விரோதக் கும்பலின் வெறிச்செயலை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மக்களின் பாதுகாப்பையும் சமூக அமைதியையும் காக்க வேண்டிய ஒரு காவல்துறை அதிகாரிக்கே பொதுவெளியில் இத்தகைய கொடூரம் நேர்ந்திருப்பது, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சூழல் குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதள மோகத்தாலும் கட்டுக்கடங்காத போதைப் பழக்கத்தினாலும் இளைஞர்கள் வழிதவறி, கொடூரக் குற்றச்செயல்களில் துணிந்து ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும்.
காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற ஒரு சூழல் நிலவுவது ஆரோக்கியமான ஜனநாயக சமூகத்திற்கு அழகல்ல. இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்து, அவர்கள் மீது பாரபட்சமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீதும், மது மற்றும் போதைப் பொருட்கள் புழக்கம் ஆகியவற்றின் மீதும் காவல்துறை எவ்வித சமரசமுமின்றி கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைக் கலாச்சாரத்தையும், அதனால் பெருகும் குற்றச்செயல்களையும் வேரோடு களைய தமிழக அரசு உரிய கொள்கை முடிவுகளை எடுத்து, உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.