தமிழக செய்திகள்

துபாய் ஏர்போர்ட் அருகே தாக்குதல்: மீண்டும் சென்னைக்கே திரும்பிய எமிரேட்ஸ் விமானம்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 8.20 மணியளவில் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தரையிறங்கியது

துபாய் எண்ணெய் கிடங்கு அருகே ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக, சென்னையிலிருந்து இன்று அதிகாலை துபாய் புறப்பட்டுச் சென்ற 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' பயணிகள் விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 2.15 மணிக்கு துபாயிலிருந்து 242 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது

பின்னர், மீண்டும் சுமார் 200 பயணிகளை ஏற்றிக்கொண்டு, அந்த விமானம் அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது. குஜராத் கடல் எல்லைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்த போது, துபாயில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடப்பதாகவும், இதனால் வான்வெளி தற்காலிகமாக மூடப்படுவதாகவும் விமானிக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 8.20 மணியளவில் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் தற்போது விமானத்திற்குள்ளேயே அமர வைக்கப்பட்டுள்ளனர். இன்று அபுதாபி செல்லவிருந்த எத்தியாட் மற்றும் இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன