கும்பகோணம்,
கும்பகோணம் ரெயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் ரெயிலில் பயணித்ததைத் தட்டிக்கேட்ட பெண் தலைமை காவலரைத் தாக்கியதாக தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று ரெயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் (வயது 26). இவர் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை - திருச்செந்தூர் அதிவிரைவு ரெயிலில் படிக்கட்டில் நின்றுகொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் தலைமை காவலர் கவிதா என்பவர் ஆகாஷை உள்ளே சென்று பாதுகாப்பாக பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், பெண் காவலருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, அவர் கவிதாவிடம் இருந்த செல்போனைப் பறித்து உடைத்ததோடு, அவரைத் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் படுகாயமடைந்த பெண் தலைமை காவலர் கவிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல் நடத்திய குற்றங்களுக்காக ஆகாஷை உடனடியாக கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஆகாஷ், கடந்த ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூரில் நடந்த விசிக சாலை மறியல் போராட்டத்தின் போது காவல் உதவி ஆய்வாளரை பொதுவெளியில் தாக்கிய வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவர் காவலரைத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.