குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு தம்பதி சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது அவர்களுக்கும், கோவில் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தற்காலிக பணியாளர், அந்த தம்பதியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர்களை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி தாக்க முயன்றுள்ளார். தம்பதியின் அலறல் கேட்டு அங்கிருந்த தூய்மை பணியாளர்கள், கோவில் தற்காலிக ஊழியர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை சரமாரி தாக்கியதாகவும், அதனை தடுக்க வந்த அவரது கணவருக்கும் அடி உதை விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் கூறுகையில், கோவில் வளாகத்தில் சிலர் சாமியாடி பணம் வசூல் செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று அந்த தம்பதியினர் சாமியாடி பணம் வசூலித்தனர். இதற்காக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் போது அந்த பெண், கோவில் பணியாளரை தாக்கியுள்ளார். அதன்பிறகே அங்கிருந்த தூய்மை பணியாளர்கள், தற்காலிக ஊழியர்கள் தம்பதியினரை தாக்கியுள்ளனர் என்றார்.