தமிழக செய்திகள்

அரசு பள்ளி தலைமை ஆசிரியை மீது தாக்குதல் - சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அதிகாரிகள்

கரூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய இடைநிலை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கரூர்,

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னாண்டாள் கோவில் பகுதியில் இயங்கி வரும் அரசு துவக்கப் பள்ளியில் புவனா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் கலைமதி என்பவர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே, கலைமதி பள்ளிக்கு சரியாக வருவதில்லை என உயர் அதிகாரிகளிடம் தலைமை ஆசிரியர் புவனா புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணையும் நடத்தியுள்ளனர். இதனால் கலைமதிக்கு புவனா மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 30-ந்தேதி, தலைமை ஆசிரியர் புவனா வகுப்பில் இருந்தபோது உள்ளே நுழைந்த இடைநிலை ஆசிரியர் கலைமதி, மாணவர்களின் கண் முன்னால் புவனாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இடைநிலை ஆசிரியை கலைமதியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.