தமிழக செய்திகள்

பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்: அமைச்சரின் உறவினர் என மிரட்டிய 2 பேர் கைது

கேனில் பெட்ரோல் கொடுக்க மாட்டோம் என்று ஊழியர் கூறியுள்ளார்.

கோவை,

பெட்ரோல் பங்க்

கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்க்குக்கு நேற்று முன்தினம் இரவில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் தங்களின் மோட்டார் சைக்கிள் பெட் ரோல் இல்லாமல் நடுவழியில் நின்றுவிட்டது. எனவே கேனில் பெட்ரோல் வழங்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு அந்த ஊழியர் அரசு விதிமுறைகளின்படி கேனில் பெட்ரோல் வழங்க அனுமதி இல்லை என்று கூறி கேனில் பெட்ரோல் கொடுக்க மறுத்தார். உடனே அந்த 2 பேரும் அங்கு இருந்த பங்க் பொறுப்பாளரிடம் சென்று முறையிட்ட னர். அதற்கு அவரும் கேனில் பெட்ரோல் கொடுக்க மாட்டோம் என்று கூறினார்.

ஊழியர்களிடம் வாக்குவாதம்

இதனால் அந்த 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதில் ஒருவர் நான் யார் தெரியுமா? அமைச்சரின் உறவினர் எனக்கே கேனில் பெட்ரோல் கொடுக்க மறுக்கிறீர்களா, உங்களை நான் என்ன செய்கிறேன் பார்க்கிறீர்களா என்று கூறி மிரட்டியதுடன், ஊழியர் ஒருவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அமைச்சரின் உறவினர் என்றுக்கூறி பெட்ரோல் பங்க்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதனால் அந்த வீடியோ வைரலானது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

2 பேர் கைது

இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பெட்ரோல் பங்க்கில் அமைச்சர் உறவினர் என்றுக்கூறி தகராறில் ஈடுபட்டது ரத்தினபுரியை சேர்ந்த ராகவேந் திரா (வயது 27), அவருடைய நண்பர் ஸ்ரீஜெயசங்கரன் (24) என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, பெட்ரோல் பங்க்கில் தகராறில் ஈடுபட்டவர்கள் தனது உறவினர் இல்லை என்றும், தனது பெயரை கூறி பொதுவழியில் தகராறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அமைச்சர் சம்பத் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராகவேந்திரா, ஸ்ரீஜெயசங்கரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.