கிருஷ்ணகிரி,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. காதல் என்ற பெயரில் இளைஞர்கள் சிலர் பெண்கள் மீது வன்முறையை கையாள்வது சமீப காலங்களில் அதிகரித்து வருவது விடியா திமுக அரசு ஈவ்டீசிங் தடுப்புச் சட்டத்தினை எந்த அளவிற்கு மெத்தனப் போக்குடன் செயல்படுத்தி வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. அம்மையார் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக கடுமையான சட்டங்களை செயல்படுத்தி குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார்.
ஆனால் இப்போது உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளங்களிலும், கட்சிப் பணிகளிலும் கவனம் செலுத்தி மகளிர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விட்டதுதான் மிச்சம். முன்பெல்லாம் இரவு நேரங்களில் தான் பெண்கள் வெளியே செல்ல அச்சப்படுவார்கள். ஆனால் இருண்ட திமுக ஆட்சியில் பகலிலும் பெண்களை நடமாட விடாமல் மீண்டும் 50 ஆண்டுகள் பின்னோக்கிய நிலைமையில் தமிழக பெண்களை முதல்-அமைச்சர் கொண்டுவந்து விட்டு, வெல்லும் தமிழ்ப்பெண்கள் மாநாடு நடத்துவது கேலிக் கூத்தாக உள்ளது. மீண்டும் நம் வீட்டுப் பெண்கள் வீறுநடை கொள்ள, பயமின்றி நடமாட இந்த தேர்தலுடன் விடியா திமுக அரசை விரட்டுவோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.