தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பொதுமக்களிடம் பணம் மோசடியில் ஈடுபடுவதற்காக மாவட்ட கலெக்டரின் புகைப்படத்தை Display Picture ஆக வைத்து பல போலியான வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும், கணக்குகளை உருவாக்கியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டரின் தனிப்பட்ட உதவியாளர் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை ஏ.டி.எஸ்.பி. (பொறுப்பு) தீபு மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் தொழில்நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டதில், உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ்குமார் (வயது 21) என்பவர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் புகைப்படத்தை பயன்படுத்தி பல போலியான கணக்குகளை உருவாக்கி இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் அனுஜ்குமாரை கடந்த 9.2.2026 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் சென்று கைது செய்து நேற்று முன்தினம் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மாவட்ட கலெக்டரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான கணக்குகளை உருவாக்கி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட இருந்த குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.