தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரைக்கு தென்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகர உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இனிகோ நகர் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தபடுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, முதல் நிலை காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் நேற்று நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இனிகோ நகர் கடற்கரைக்கு தென்புறம் உள்ள காட்டுப் பகுதியில், இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 30 கிலோ எடை கொண்ட 18 பீடி இலை மூட்டைகளை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். போலீசாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்த வைத்திருந்த சரக்கு வாகனம் மற்றும் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட 18 பீடி இலை மூட்டைகள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.17 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.