தமிழக செய்திகள்

இளம்பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: 2 வாலிபர்களை துரத்தி பிடித்த பொதுமக்கள்

ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் வேலை முடிந்து தனது பைக்கில் தனியாகச் சென்று கொண்டிருந்தபோது, அவரது பைக்கின் பின்னால் மற்றொரு பைக்கில் 2 வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இளம்பெண்ணிடம் செயினைப் பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் துரத்திப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற வாலிபர்கள்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள இசவன்குளத்தைச் சேர்ந்த லெட்சுமணன் மனைவி மாரித்தங்கம் (வயது 30). இவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாலை வேலை முடிந்து பேட்மாநகரம், ஸ்ரீமூலக்கரையில் இருந்து இசவன்குளத்திற்கு மாரித்தங்கம் பைக்கில் தனியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கின் பின்னால் மற்றொரு பைக்கில் 2 வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

செயின் பறிக்க முயற்சி

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்தபோது, திடீரென வேகமாக வந்த அந்த வாலிபர்கள் மாரித்தங்கத்தின் பைக்கை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த தங்கச் செயினைப் பறிக்க முயன்றனர். இதனைக் கண்டு சற்றும் பதறாமல் சுதாரித்த மாரித்தங்கம், செயினைப் பறிக்க விடாமல் அவர்களுடன் போராடியதுடன் "திருடன், திருடன்" என்று சத்தமிட்டுக் கூச்சலிட்டார்.

2 வாலிபர்களை துரத்தி பிடித்த பொதுமக்கள்

அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினரும், அந்த வழியாக பைக்கில் வந்த பொதுமக்களும் உடனடியாக ஓடிவந்து அந்த வாலிபர்களைப் பிடிக்க முயன்றனர். பொதுமக்களின் திடீர் வருகையால் அதிர்ச்சியடைந்த அந்த 2 பேரும் தாங்கள் வந்த பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். இருப்பினும் விடாமல் துரத்திச் சென்ற பொதுமக்கள் அந்த 2 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்துக் கீழே தள்ளினர்.

2 வாலிபர்கள் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களின் பிடியிலிருந்த 2 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்ட நபர்கள், தூத்துக்குடி சந்திரவேல்புரத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஐகோர்ட் மகாராஜா(35) மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த வாசுதேவன் மகன் சதீஷ்(30) என்பது தெரியவந்தது. மேலும் பிடிபட்ட 2 பேரில் ஐகோர்ட் மகாராஜா மீது 5 வழக்குகளும், சதீஷ் மீது ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாரித்தங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் கலைக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இளம்பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT