தஞ்சை,
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சை திலகர் திடலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தஞ்சை மாவட்டத்தில் போட்டியிடும் 8 வேட்பாளர்களை பரப்புரை கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியதாவது:-
தஞ்சை தரணிக்கு வந்தாலே கம்பீரம் பிறக்கிறது. யானை கட்டி போரடித்த மண் தஞ்சாவூர்.ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் ஆண்ட மண். தமிழர்களின் கம்பீரத்துக்கு சோழர்களே காரணம். திராவிட மாடல் நல்லாட்சி தொடர வேண்டும் என்று தமிழகமே சொல்கிறது. தஞ்சையும் ரெடியா? 200 தொகுதிகளில் வெல்வோம் என சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது 200க்கும் மேல் வெல்வோம் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது.
அடிமைகளின் கூடாரமாகிவிட்டது அதிமுக. அடிமைக்கூடாரம் அதிமுக என்பதால் திமுகவில் இணைந்து வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். உண்மையான விவசாயியா இருந்தா இந்தியா முழுக்க உழவர்கள் எதிர்த்து போராடிய 3 வேளாண் சட்டங்களை ஆதரிச்சிருப்பாரா? போராடிய விவசாயிகளை புரோக்கர்கள் எனச் சொன்னவர்தான் புளுகுமூட்டை பழனிசாமி.
அதிர்ச்சி தகவல் ஒன்றை சொல்கிறேன். பழனிசாமியின் ஓனர் மத்திய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தது. மொத்தத்தில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என வலியுறுத்தி கடிதம் வந்திருக்கிறது. தமிழக அரசு தரும் ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி அதிகமாகிறது.அதனால் நெல்லுக்கு வழங்கும் ஊக்கத்தொகை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனெ கடிதம். இப்படிகூட ஒருவரால் யோசிக்க முடியுமா? என நினைக்கும்படி கடிதம் இருந்தது.
தமிழர் என்ற உணர்வு இருந்தால், பழனிசாமி வாய் திறந்து பாஜகவை கண்டிப்பாரா? விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய துரோகம் இது? பச்சை துண்டு போட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார் போலி விவசாயி பழனிசாமி. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறேன்.
வணிக சிலிண்டர்களை விலையை ஏற்றி வியாபாரிகள் தலையில் இடியை இறக்கியவர் மோடி.சிலிண்டர் தட்டுப்பாட்டால் சில உணவகங்கள் மூடப்பட்டன. சிலர் குறைந்த உணவுகளை தயாரிக்கிறார்கள். விலை உயர்வால் வணிகள் மட்டுமின்றி அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
கலைஞர் சொன்னபடி எப்படி டிவி தந்தாரோ, அப்படி நானும் சொன்னபடி ரூ.8,000 கூப்பன் தருவேன். ரூ.8,000 கூப்பனில் என்ன வாங்க வேண்டுமென வீட்டுக்காரரிடம் கேட்காதீர்கள். என்ன வாங்க வேண்டுமென்பதை பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும். யாராவது தொந்தரவு செய்தால் இந்த அண்ணனிடம் கூறுங்கள்.
பாஜக ஆளாத மாநிலங்களில் அதிகாரிகளை எப்படி பந்தாடுவது என்பதே மத்திய அரசுக்கு கவனத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை நியமித்து தேர்தலில் தில்லுமுல்லு செய்ய முயற்சி.அமைதியான தேர்தலுக்கு எப்போதும் தமிழ்நடுதான் சிறந்த முன்மாதிரி.
யோகத்தை நம்புகிறவன் அல்ல, என் உழைப்பை நம்புகிறவன். கலைஞரின் உழைப்பை கற்ற மாணவன் நான். மூட நம்பிக்கைகளை உடைத்து கடந்த 2021ம் ஆண்டை விட அதிக தொகுதிகள் பெற்று தொடர்ந்து 2வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.