திருச்சி,
திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையம் எதிரே உள்ள வங்கியில் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் மிகவும் பழமையானது கண்டோன்மெண்ட் காவல் நிலையம். கோர்ட்டு அமைவிடம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதி கண்டோன்மெண்ட் என்பதால் இரவு, பகல் என 24 மணி நேரமும் இப்பகுதி பரபரப்பாக காணப்படும். கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு நேர் எதிரில் ஒரு பொதுத்துறை வங்கி உள்ளது.
நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து அதன் கிளை மேலாளர் மற்றும் பணியாளர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை வங்கியின் காவலாளி சண்முகம் (வயது 55) என்பவர் வந்து பார்த்தபோது, வங்கியின் மெயின் கதவில் போடப்பட்டு இருந்த 2 பூட்டுகள் உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சண்முகம் உடனடியாக வங்கியின் மேலாளருக்கு தகவல் கொடுத்தார்.
நேற்று 2-வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். ஆனாலும் பூட்டு உடைக்கப்பட்ட தகவல் அறிந்ததும் வங்கி ஊழியர்கள் அங்கு உடனடியாக வந்தனர். இதுபற்றி கண்டோன்மெண்ட் போலீசாரிடம் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து கண்டோன்மெண்ட் சரக உதவி போலீஸ் கமிஷனர் வடிவேல், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பு செல்வன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
வங்கியின் கண்காணிப்பு கேமரா மற்றும் அந்த பகுதியில் உள்ள கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் உள்ளே புகுந்த மர்மநபர்கள் யார்? என்பது பற்றி ஆய்வு செய்தனர். போலீஸ் துப்பறியும் நாய் 'காவேரி'யும் உடனடியாக வரவழைக்கப்பட்டது. அது வங்கியின் உள்பகுதியில் மோப்பம் பிடித்துவிட்டு வெளியில் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
கொள்ளை முயற்சி நடந்த வங்கியில் இரவு நேர காவலாளி கிடையாது. பகலில் மட்டும் தான் காவலாளி பணியில் இருப்பது வழக்கமாம். இந்த வங்கியில் நகை பாதுகாப்பு பெட்டக வசதியும் உள்ளது. பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த நகைகள் மற்றும் டெபாசிட் பணம் ஆகியவை பாதுகாப்பாக உள்ளதா? கொள்ளை ஏதும் போனதா? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
போலீசார் தரப்பில் கூறும்போது, இது வெறும் கொள்ளை முயற்சி தான். போதை ஆசாமி யாராவது பூட்டை உடைத்து இருக்கலாம். இதுதொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். இதுதொடர்பாக கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலையத்திற்கு நேர் எதிரிலேயே கொள்ளை முயற்சி நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.