தமிழக செய்திகள்

ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா மீது துப்பாக்கி சூடு முயற்சி: வைகோ கண்டனம்

ஸ்ரீநகரில் அவர் இரண்டு முறை நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்றவன் நான் என வைகோ தெரிவித்து உள்ளார்.

சென்னை

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில், காஷ்மீரத்து சிங்கம் ஷேக் அப்துல்லாவின் அன்பு புதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு -காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான என் உயிரனைய நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லாவை கொலை செய்ய முயன்று, பிஸ்டலால் ஒரு கொடியவன் குண்டுகளை ஏவியபோது, நூலிழையில் அவர் உயிர் தப்பினார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் அதிர்ச்சியால் நான் துடிதுடித்து போனேன். அல்லாவின் கருணையால் தான் காப்பாற்றப்பட்டுவிட்டதாக டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருக்கிறார்.

தன்னை கொல்ல முயன்றவருக்கும், தனக்கும் எந்த பகையும் இல்லை என்றும், தன் மீது வெறுப்பு கொண்டு கொலை செய்ய முயன்றதற்கான காரணம் தனக்கு புரியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்திய நாட்டின் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவர்தான் அவர். மாநில சுயாட்சி கொள்கை வெற்றி பெறவும், இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அவர் அருந்தொண்டு ஆற்றி வந்தார்.

அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பதும், பலத்த போலீஸ் பாதுகாப்பு கொண்டிருக்கின்ற ஒருவரை எவ்வாறு அந்த கொடியவன் நெருங்க முடிந்தது என்பதும் பல்வேறு ஐயங்களையும், வினாக்களையும் எழுப்புகிறது. மத்திய அரசு தக்க விசாரணை செய்து, அதற்கான விளக்கத்தை தர கடமைப்பட்டுள்ளது.

1980-ம் ஆண்டிலிருந்து கடந்த 46 வருடங்களாக நான் உயிருக்கு உயிராக நட்பு கொண்ட டாக்டர் பரூக் அப்துல்லா என் மீது எல்லையற்ற அன்பும், பாசமும் கொண்டவராவார்.

எமது இயக்கம் 1998-ல் நடத்திய மறுமலர்ச்சி பேரணியிலும், 2000-ம் ஆண்டு காஞ்சி மாநாட்டிலும், ஈரோடு மாநாட்டிலும், தலைநகர் டெல்லியில் ஈழத்தமிழர்களுக்காக நானும், என்னுடைய தோழர்களும் இரண்டு முறை நடத்திய உண்ணாவிரத நிகழ்ச்சிகளிலும், 2018-ல் ஈரோட்டில் நாங்கள் நடத்திய பொன்விழா மாநாட்டிலும் பங்கேற்று சிறப்பித்தவர் அம்மாமனிதர் ஆவார்.

அவர் ஜம்மு -காஷ்மீர் முதல்-மந்திரியாக இருந்தபோது, நானும், எனது இல்லத்தாரும் ஒரு வார காலம் அவரது விருந்தினர்களாக எங்களை உபசரித்த அவரின் நேசமும், பாங்கும் மறக்க மடியாதவை. ஸ்ரீநகரில் அவர் இரண்டு முறை நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் நான் பங்கேற்றவன். அவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சிக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

அவருக்கு நேர இருந்த உயிராபத்தை எண்ணி நான் மிகவும் கவலைப்படுகிறேன்; பதற்றம் அடைகிறேன். அன்னாருக்கு தக்க பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும், இக்கொலை முயற்சியில் ஈடுபட்டவனை கைது செய்து தக்க விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்க மத்திய அரசு கடமைப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT