தமிழக செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு.. பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

பழுதினை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி,

கம்பி வட ஊர்தியில் ஏற்பட்ட பழுது காரணமாக பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

பழனி மலைக்கோவில்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரெயில் (வின்ச்) மற்றும் கம்பி வட ஊர்தி (ரோப் கார்) ஆகிய வசதிகள் உள்ளன. இழுவை ரெயிலில் 7 நிமிடங்களிலும், ரோப் காரில் 3 நிமிடங்களிலும் மலைக்கோவிலை அடையலாம்.

பழனி மலையின் அழகை ரசித்தபடி, ரோப் காரில் செல்லவே பக்தர்கள் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். மாதந்தோறும் ஒரு முறையும், ஆண்டுதோறும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக 50 முதல் 60 நாட்கள் வரை ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது.

ரோப் கார் சேவை

அதன்படி, கடந்த ஜூலை 20-ம் தேதி முதல், வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 64 நாட்களுக்கு பிறகு கடந்த செப்.22ம் தேதி முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கம்பி வட ஊர்தியில் ஏற்பட்ட பழுது காரணமாக பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பழுது நீக்கப்பட்ட பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பழுதுநீக்கப் பணிகள்

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

* பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், இன்று (20.10.2026) காலை சுமார் 11.00 மணியளவில் கம்பிவட ஊர்தியின் (Rope Car) கியர்பாக்ஸ் ஷாப்டில் (Gear Box Shaft) ஏற்பட்ட பழுது காரணமாக ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

* பழுதினைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழுதுநீக்கப் பணிகள் நிறைவடைந்ததும், ரோப்கார் சேவை மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT