சென்னை,
ரெயில்வே துறையின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும், பயணிகள் விதிமீறலை தடுக்கவும் இந்திய ரெயில்வே சட்டம் 1989-ல் பல்வேறு திருத்தங்களை ரெயில்வே நிர்வாகம் செய்துள்ளது. அதன்படி, ஜூலை 1-ந் தேதி முதல் விதிமீறல்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட இருக்கிறது. அதாவது, ரெயில்களில் பெண்கள் பெட்டியில் பயணிக்கும் ஆண்களுக்கான அபராதம் ரூ.500-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட இருக்கிறது.
அதேபோல், ரெயில்களில் உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளிடம் அபராத தொகை ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-
ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கான குறைந்தபட்ச அபராத தொகை ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படுகிறது. அதேபோல, அதிகபட்ச அபராத தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.
மேலும், ரெயில் நிலையங்களில் அனுமதியின்றி பொருட்களை விற்பனை செய்தால், ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணித்தால், ரூ.2 ஆயிரமும், ஆபத்தான பொருட்களை ரெயில்களில் கொண்டு சென்றால், ரூ.10 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கப்படும். ரெயில்களில் புகைப்பிடித்தால், ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.