தமிழக செய்திகள்

வாக்களிக்க வெளியூர் செல்வோர் கவனத்திற்கு.. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்..!

சென்னையில் தங்கியிருக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வாக்களிக்க தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. கருத்துக்கணிப்பு வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுநாள் (23-ம் தேதி) நடைபெற உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கியிருக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வாக்களிக்க தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

அவர்களின் வசதிக்காக இன்று (ஏப். 21) முதல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 5,574 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் அடுத்தபடியாக தனியார் ஆம்னி பஸ்களை தேர்வு செய்வார்கள். இதை பயன்படுத்தி பல ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்வது தொடர் நடவடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.

தற்போது சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் இருந்து மாநிலத்தின் அனைத்து இடங்களுக்கும் ரூ.500 முதல் ரூ.2,000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களை போன்று தேர்தல் விடுமுறையிலும் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்கள் வாக்களிக்க செல்வதை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் அளிக்க வேண்டிய எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.