தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மலையை சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரி வலம் செல்வார்கள்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சித்ரா பவுர்ணமி வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.52 மணிக்கு தொடங்கி மறுநாள் மே 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியின் போது 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலத்திற்கு வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.