தமிழக செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 17 சவரன் நகை திருட்டு: ஆட்டோ ஓட்டுநர் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு மூதாட்டி, சுந்தரவேல்புரத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் முன்கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 17 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில், பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 சவரன் தங்க நகைகளை திருடிய ஆட்டோ ஓட்டுநரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.

17 சவரன் தங்க நகைகள் திருட்டு

தூத்துக்குடி மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜா சீனிவாசன். இவரது மனைவி உமாதேவி (வயது 61). இவர் கடந்த ஜூலை 22-ம் தேதி குடும்பத்தினருடன் சுந்தரவேல்புரத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 17 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

சி.சி.டிவி. கேமரா பதிவுகள் ஆய்வு

இந்த திருட்டு சம்பவம் குறித்து உமாதேவி அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அண்ணாநகரைச் சேர்ந்த நாராயணன் மகன் சீமான்(38) என்பவர் இத்திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநர் கைது

இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரான சீமானை கைது செய்த போலீசார், மேற்கொண்ட விசாரணையில், தனது நண்பர்கள் 2 பேரின் உதவியுடன் திருடப்பட்ட நகைகளை வங்கியில் அடகு வைத்திருப்பதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சீமானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த, தலைமறைவான 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.