சென்னை,
சென்னை அருகே சிக்னல் விளக்கை துணியால் மறைத்துக்கட்டி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை நடுவழியில் நிறுத்தி பெண் பயணியிடம் தங்க நகையைப் பறித்த ஆட்டோ ஓட்டுநரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து நெல்லைக்கு தினமும் இரவு 8 மணியளவில் நெல்லை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி வழக்கம் போல் இந்த ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டுச் சென்றது. ரெயில் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர்- பொத்தேரி ரெயில் நிலையங்கள் இடையே சென்று கொண்டிருந்தபோது, திடீரென சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. அதே நேரத்தில் எதிரே வந்த மற்றொரு ரெயிலும் சிக்னல் தெரியாததால் மெதுவாக வந்தது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் ஆய்வு செய்தபோது, இரு தண்டவாளங்களிலும் இருந்த சிக்னல் கம்பங்களில், பச்சை நிற விளக்கு எரியும் பகுதி மட்டும் துணியால் கட்டப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிக்னல் விளக்கை துணியால் மறைத்து ரெயிலை நிற்கச் செய்து, பின்னர் ரெயிலில் ஏறி பயணிகளிடம் கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த வினோத திருட்டு திட்டம் தீட்டப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தாம்பரம் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர், நெல்லை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலை நடுவழியில் ஒரு பெண்ணிடம் தங்க நகை பறிப்பில் ஈடுபட்டது உறுதியானது.
பகல் நேரங்களில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வரும் இவர், இரவு நேரங்களில் ரெயில் பயணிகளை குறிவைத்து, ரெயில்களை சிக்னல் மூலம் நிறுத்தி உடைமைகளை பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட குமரேசன் மீது ஏற்கனவே கொருக்குப்பேட்டை, சென்னை சென்ட்ரல், ராயபுரம் உள்ளிட்ட 6 காவல் நிலையங்களில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.