தமிழக செய்திகள்

மதுபோதையில் தாயை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் எரித்து கொலை: தூத்துக்குடியில் பயங்கரம்

தூத்துக்குடியில் மதுபோதையில் தாய் மற்றும் தங்கையைத் தாக்கி, குழந்தையை கொல்லப் போவதாக மிரட்டிய மகனை, பெற்ற தந்தையே தின்னர் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மதுபோதையில் தாய் மற்றும் தங்கையைத் தாக்கி, குழந்தையை கொல்லப் போவதாக மிரட்டிய மகனை, பெற்ற தந்தையே தின்னர் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறு

தூத்துக்குடி மடத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 32). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதன் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு கயத்தாறில் உள்ள மறுவாழ்வு மையத்தில் 3 மாதங்கள் சிகிச்சை பெற்று திரும்பிய அவர், சில காலம் நன்றாக இருந்துவிட்டு மீண்டும் குடிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தாய் மீது தாக்குதல்

இந்த நிலையில், நேற்று இரவு அருள்ராஜ் கடும் போதையில் வீட்டிற்கு வந்து தனது தாயை தாக்கியுள்ளார். இதில் அவரது தலை மற்றும் கைகளில் ரத்தக்காயம் ஏற்பட்டது. மேலும், சுரண்டையிலிருந்து தனது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் தாய் வீட்டிற்கு வந்திருந்த தனது தங்கையையும் மிரட்டி, அவரது குழந்தையை கொன்று விடுவதாக பிரச்சினை செய்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட தந்தை தளமுத்துவையும்(60) அருள்ராஜ் தாக்கியுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் எரித்து கொலை

இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் பயந்து வீட்டைப் பூட்டிக்கொண்ட நிலையில், அருள்ராஜ் வீட்டின் வாசல் அருகே தூங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை தளமுத்து, வீட்டில் பெயிண்டிங் வேலைக்காக வைத்திருந்த தின்னர் திரவத்தை, தூங்கிக் கொண்டிருந்த அருள்ராஜ் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். இதில் உடல் கருகிய அருள்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த அருள்ராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மகனை கொன்ற தந்தை தளமுத்துவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.