தமிழக செய்திகள்

ஆட்டோ டிரைவரின் மகன்: மாற்றுத்திறனாளி மாணவர் சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க தேர்வு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு கிடைக்கவும், பிளஸ்-2 படிக்கும் போதே இதுகுறித்த தகவல்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவன் சந்தோஷ் கோரிக்கை விடுத்தார்.

சென்னை,

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகனான, மாற்றுத்திறனாளி மாணவர் சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். தகவல் அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆட்டோ டிரைவரின் மாற்றுத்திறனாளி மகன்

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகநாதன்-பானுப்பிரியா தம்பதியின் மகன் சந்தோஷ் (வயது 17). முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவர், அத்திப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தார். நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 531 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். தகவல் அறிவியல் படிக்க தேர்வு

இதைத்தொடர்ந்து ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் 4 ஆண்டு பி.எஸ். தகவல் அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதற்கான தகுதித்தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த தகுதித்தேர்வில் தேர்வான நிலையில், பி.எஸ். தகவல் அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார். எதிர்காலத்தில் கேட் தேர்வு எழுதி முதுகலை பட்டம் பெற விரும்புவதாக சந்தோஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு; அரசு நடவடிக்கை

மேலும் அவர், தன்னை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இதுபோன்ற உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து முறையான விழிப்புணர்வு கிடைக்கவும், பிளஸ்-2 படிக்கும் போதே மாணவர்களுக்கு இதுகுறித்த தகவல்களை கொண்டு சேர்க்கவும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

SCROLL FOR NEXT