ரத்தக்கறை படிந்த ஆட்டோ  
தமிழக செய்திகள்

குன்றத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை: 3 நண்பர்கள் கைது

விசாரணையில் அவர்கள் மகேஷை முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

சென்னை,

குன்றத்தூர் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அவரது நண்பர்களே அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லைப்போட்டும் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதத்தால் வெட்டிக்கொலை

சென்னை, குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகேஷ் (வயது 27). மற்றும் அவரது நண்பர்களான ஹரிகிருஷ்ணன் (வயது 27), வெங்கடேசன் (வயது 21), லலித்குமார் (வயது 21) ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பூந்தண்டலம் பகுதியில் மது அருந்தியுள்ளனர்.

அப்போது மீண்டும் அவர்களுக்குள் பழைய பகை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த 3 பேரும், மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், அவர் உயிர் பிழைக்கக் கூடாது என்பதற்காக அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுவிட்டு, தங்களது ஆட்டோவில் தப்பியோடினர். பலத்த காயமடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

நள்ளிரவில் மாட்டிய கொலையாளிகள்

இதையடுத்து, திருமுடிவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து திருமுடிவாக்கம் பகுதியில் நேற்று நள்ளிரவு போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு ஆட்டோவை போலீசார் சந்தேகத்தின் பேரில் மறித்து நிறுத்தினர். அந்த ஆட்டோவில் 3 இளைஞர்கள் மதுபோதையில் இருந்தனர். மேலும், அவர்களின் உடைகளிலும் ஆட்டோவிலும் ரத்தக்கறைகள் படிந்திருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

போலீஸ் நடவடிக்கை

மகேஷின் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அந்த 3 பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மகேஷை முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து ஹரிகிருஷ்ணன், வெங்கடேசன், லலித்குமார் ஆகிய 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து அவர்களிடம் குன்றத்தூர் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.