கடலூர்,
கடலூர் வண்டிப்பாளையம் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கியதால் ஏற்பட்ட வழுக்கலில், பயணிகள் இருந்த ஆட்டோ ஒன்று தலைகீழாக கவிழ்ந்து சறுக்கிச் சென்றதில் 4 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வண்டிப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி மெயின் ரோட்டில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அந்த சாலை முழுவதும் கடுமையான வழுக்கல் நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று (திங்கள்கிழமை) வண்டிப்பாளையம் மெயின் ரோடு வழியாக பயணிகளுடன் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் தேங்கியிருந்த சாக்கடை நீரில் எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் டயர்கள் வழுக்கின. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, நடுரோட்டிலேயே திடீரென தலைகீழாக கவிழ்ந்தது. கவிழ்ந்த வேகத்தில் ஆட்டோ சாலையில் சில மீட்டர் தூரம் சறுக்கிக் கொண்டு சென்றது. ஆட்டோவிற்குள் இருந்த பயணிகள் அலறியடித்தனர். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், உடனடியாக ஓடிவந்து ஆட்டோவை நிமிர்த்தி, உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்தவர்களின் விபரங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "சாலையில் தொடர்ந்து கழிவுநீர் வழிந்தோடி விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்தும், நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, நகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பாதாள சாக்கடை அடைப்பைச் சரிசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.