தமிழக செய்திகள்

ஒவ்வொரு டாஸ்மாக் கடை அருகிலும் தானியங்கி எந்திரம்: தமிழக அரசு திட்டம்..!

விரைவில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, எந்திரங்களை நிறுவும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

காலி பாட்டில்களை எளிதாகத் திரும்பப் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் அதிநவீன தானியங்கி எந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பொதுநல வழக்கு

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் காலி மதுபாட்டில்கள் உரிய முறையில் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

அரசுத் தரப்பில் விளக்கம்

இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், காலி மதுபாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் பொதுமக்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

4 ஆயிரம் தானியங்கி எந்திரங்கள்

காலி பாட்டில்களை எளிதாகத் திரும்பப் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் அதிநவீன தானியங்கி எந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு டாஸ்மாக் மதுபானக் கடையின் அருகிலும் ஒரு எந்திரத்தை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஒப்பந்ததாரரைத் தேர்வு செய்ய டெண்டர்

இந்த தானியங்கி எந்திரங்களை நிறுவி இயக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரைத் தேர்வு செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, எந்திரங்களை நிறுவும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை ஊழியர்களே பாட்டில்களைப் பெற வேண்டும்

இதற்கிடையே, ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு பணிகளைத் தொடங்கும் வரை, டாஸ்மாக் ஊழியர்களே பொதுமக்களிடம் இருந்து காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT