சென்னை,
வெள்ளப்பெருக்கை முடிந்த அளவுக்கு முன்கூட்டியே கண்டறிந்து, அங்குப் பயணிப்போரை எச்சரித்து, உரிய பாதுகாப்பு வழங்கிட இந்தியா, சீனா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் தகவல்களைப் பரிமாறக்கூடிய நவீன சாதனங்களைக் கொண்டு கண்காணிக்க உடனடி நடவடிக்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
ஏறக்குறைய 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மிக ஆழத்தில் இருக்கும் 'டெக்டானிக்' தட்டுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கடலின் ஒரு பகுதியாக இருந்து மேலேழுந்து உருவானதே 'இமயமலை'.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இமயமலை, 2,500 கிலோமீட்டர் நீளமும், 300 முதல் 400 கிலோமீட்டர் அகலமும், ஏறக்குறைய 8 ½ கிலோமீட்டர் உயரமான உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை உள்ளடக்கிய "பனிப்படலத்தின் தாயகமாகும்".
இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் பாயக்கூடிய பெருநதிகளின் தொடக்கமாக இமயமலை திகழ்கிறது. இதன் மேற்குப் பகுதி மிக அகலமாகவும், கிழக்குப் பகுதி மிகக் குறுகலாகவும்; இமயமலையின் பெரும்பகுதி இந்திய தேசத்திற்குள் உள்ளடங்கியும் இருக்கிறது.
வடக்கே இந்தியாவின் மாபெரும் அரணாக இருப்பது இமயமலையே; இது வெறும் எல்லைக் கோடு மட்டுமல்ல; இந்திய தேசத்தின் பூர்வீகம், கலை, கலாசாரப் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்ததாகும். மிகப்பெரிய புண்ணியத் தலங்களாகக் கருதப்படும் அமர்நாத், கேதர்நாத், மானசரோவர் உள்ளிட்ட பகுதிகள் இமயமலையின் பனிப்படலங்களுக்கு இடையேதான் அமைந்து இருக்கின்றன.
ஆனால், இமயமலையில் பனிச்சரிவு ஏற்படும் வரலாறு என்பது நேற்று, இன்று உருவானது அல்ல, இமயமலையின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்ததாகும். இமயமலையின் எவரெஸ்ட் சிகர உச்சியையும், பிற சிகரங்களையும் அடைந்துவிட வேண்டும் என்பதற்காக மலையேற்றத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்கொண்ட ஆபத்துகள் பனிச்சரிவுகளால் ஏற்பட்டவையே. ஆனால், சிறிய அளவிலான ஆபத்துகளை மலையேறிகள் எதிர்கொண்டதால் அதைப் பெரிதாக யாரும் கருதுவதில்லை.
கடந்த 26-ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவு என்பது பிரம்மாண்டமானது. தரையிலிருந்து ஏறக்குறைய 5 கிலோமீட்டர் உயரத்தில் இருந்த 1 ½ முதல் 2 கிமீ பரப்பளவு கொண்ட பனிப்பாறைகள் உடைந்து சிதறி, பல கிலோமீட்டர்களுக்குக் கீழே ஓடிக்கொண்டிருந்த நதிகளில் விழுந்து, அதனால் நதிகளின் ஓட்டம் தடைபட்டது. அதைத் தொடர்ந்து செயற்கையாக உருவான நீர்தேக்கங்கள் உடைந்து, பல நதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குகள்தான் அண்மைக்கால வரலாற்றில் காணாத இவ்வளவு பெரிய உயிர்ச்சேதங்களுக்கும் பொருட்சேதங்களுக்கும் காரணமாகும்.
இவ்வளவு பெரிய பேரழிவுகளும் வெறும் 30 நிமிடங்களில் நடந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது; அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. ‘அழகையும் அழிவையும் உள்ளடக்கிய மகத்துவமுடையது இயற்கை’ என்பதே இதன் வெளிப்பாடாகும்.
இமயமலைப் பிராந்தியத்தில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்குகளுக்குப் பனிப்பாறை வெடிப்புகளே முதன்மையான காரணியாகப் பார்க்கப்படுகின்றன. எனினும், அதன் தூண்டுதல் காரணிகள் (Triggering Factors) என்னென்ன? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பதையும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். அதே சமயம் "எல் நினோ" (El Nino) என்று அழைக்கப்படும் திடீர் தட்பவெப்ப மாற்றங்களும் இதுபோன்ற பனிப்பாறைகள் வெடிப்புகளுக்கு மூலக்காரணமாக இருக்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. அப்பேரிடரில் பாதிக்கப்பட்டோர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.
இமயமலையின் பிரம்மாண்டமும், அதன் அளவு கடந்த பொருண்மையுமே (Height and Massiveness of the Himalayas) அதற்குப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது
இயற்கைச் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக மட்டுமே இமயமலைக்கு வரக்கூடிய ஆன்மீக விருப்பமுள்ள மக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று எவரும் எண்ணிவிடக் கூடாது.
ஏனெனில், இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியைக் காண்பதும், வடகோடியில் உள்ள இமயமலையின் பனிப்படலங்களுக்கு ஊடே இருக்கும் அமர்நாத் குகைகளின் சிவலிங்கத்தையும் கேதர்நாத்தின் அற்புதக் காட்சிகளையும் காண்பது இந்தியப் பண்பாட்டின் ஒரு அங்கமாகவே கருதி எண்ணற்றோர் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, இமயமலை பகுதிகளில் அவசியமில்லாமல் ஆபத்தான பகுதிகளில் குடியேறுவதைத் தடுத்திடவும், நவீன கட்டுமானங்களை அறவே தவிர்த்திடவும், பனிப்பாறைகளின் வெடிப்புகள், எதிர்பாராத மேகவெடிப்புகள், பெருவெள்ளங்கள் அனைத்தையும் முடிந்த அளவுக்கு முன்கூட்டியே கண்டறிந்து, அங்குப் பயணிப்போரை எச்சரித்து, உரிய பாதுகாப்பு வழங்கிட இந்தியா, சீனா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் தகவல்களைப் பரிமாறக்கூடிய நவீன சாதனங்களைக் கொண்டு கண்காணிக்க உடனடி நடவடிக்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.