சென்னை,
பள்ளிக்கல்வி துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. அதில் பேசப்பட்ட முக்கியமான கருத்துகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருக்கும் சில விவரங்கள் வருமாறு:-
2021-22-ம் கல்வியாண்டு 1-ம் வகுப்பு முதல் சேர்ந்த மாணவ-மாணவிகளின் விவரங்களை கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் (இ.எம்.ஐ.எஸ்.) பதிவேற்றம் செய்யவேண்டும். தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில், அவர்கள் அரசு பள்ளிகளை நாடுகிறார்கள். அவ்வாறு வரும் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கல்வி தொலைக்காட்சியில் பாடத்திட்டங்கள் நடத்தப்படுகிறது என்ற தகவல்களை மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். பள்ளி கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்படாத நிலையில் இருந்தால் அதை விரைந்து முடிக்கவேண்டும். கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் பாடங்கள் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்று பார்க்கவேண்டும்.
தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று கல்வி தொலைக்காட்சியில் பாடங்களை அவர்கள் ஆர்வமுடன் பார்க்கிறார்களா? அவர்களுக்கு புரிகிறதா? என்று பார்க்க வேண்டும். கல்வி தொலைக்காட்சியில் சிறந்தமுறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். தமிழக அரசின் அறிவிப்பின்படி, அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிசெய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.