சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
வாக்காளர் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி (VVPAT) மூலம் வாக்களிப்பின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளின் பகுதியாக, இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு முழுவதும் நடமாடும் செயல்விளக்க வாகனம் மற்றும் (EVM) செயல்முறை விளக்க மையங்களைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி (VVPAT) வாக்களிப்பில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வதற்கு ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் (38 மாவட்டங்கள்) மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்கள்/வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்களில் (119 இடங்கள்) (EVM) செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களை (33180) அணுகும் நோக்கத்துடன் நடமாடும் செயல் விளக்க வாகனங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி (VVPAT) பற்றிய இவ்விழிப்புணர்வு செயல்முறையானது இந்திய நேர்தல் ஆணையம் தேர்தலை அறிவிக்கும் வரை தொடர்ந்து நடைபெறும். அதன்பிறகு, இவ்விழிப்புணர்வு டிஜிட்டல் (digital) வழிகளின் மூலம் மேற்கொள்ளப்படும்.
இன்றுவரை, 81000 க்கும் மேற்பட்ட மக்கள் (EVM) செயல்முறை விளக்க மையங்களுக்கு வருகை புரிந்து மாதிரி வாக்களித்துள்ளனர். மொத்தமுள்ள 33180 வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடமாடும் செயல் விளக்க வாகனங்கள் 10515 வாக்குச் சாவடி அமைவிடங்களைச் சென்றடைந்துள்ளது.
இந்த விளக்க காட்சிகளின் மூலம், பொதுமக்கள் (EVM) மற்றும் (VVPAT) மூலம் வாக்களிப்பின் முழு செயல்முறை அதில் வாக்களிப்பது மற்றும் (VVPAT) சீட்டு மூலம் சரிபார்க்கும் முறை ஆகியவற்றை புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. அனைத்து குடிமக்களும் இந்த வசதிகளைப் பயன்படுத்தி, பொதுத் தேர்தல் அறிவிக்கும் வரை (EVM) செயல்முறை விளக்க மையங்களையும் நடமாடும் செயல் விளக்க வாகனத்தையும் பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.