தமிழக செய்திகள்

சென்னையில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

“எங்கள் பிரித்தல் நாயகர்கள்” என்ற மூன்று மாத மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியில், பொதுமக்களுக்கு திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே முறையாக தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் “எங்கள் பிரித்தல் நாயகர்கள் (Our Segregation Heroes)” என்ற மூன்று மாத மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது.

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மக்கும் மக்காத குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும். இதன்மூலம் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் முடியும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் வீடுகள்தோறும் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திடக்கழிவுகளை சேகரிக்கும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“எங்கள் பிரித்தல் நாயகர்கள்”

திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இல் குறிப்பிடப்பட்டுள்ள மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள், சுகாதாரக் கழிவுகள், வீட்டு அபாயகரக் கழிவுகள் / சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள் என நான்கு வகை கழிவு தரம் பிரிப்பு முறையை திறம்பட செயல்படுத்தும் வகையில், மாநகராட்சியின் அனைத்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கழிவு சேகரிப்பு வாகனங்களிலும் (Battery Operated Vehicles - BOVs), கழிவுகளின் நான்கு வகைகளையும் தனித்தனியாக சேகரிப்பதற்காக நான்கு வண்ண அடையாளங்களுடன் கூடிய தனித்தனி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர் நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் பேக்கேஜ்-6 பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில், பொதுமக்களுக்கு திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே முறையாக தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், பசுமையான நாளைக்காக இன்றே வகைப்படுத்துங்கள் என்ற நோக்கில் “எங்கள் பிரித்தல் நாயகர்கள் (Our Segregation Heroes)” எனும் பள்ளி மாணவர்களுக்கான குப்பைகள் தரம் பிரித்தல் விழிப்புணர்வு குறித்த புதிய முன்முயற்சி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், காணொலிக் காட்சியின் வாயிலாக இன்று (25.11.2026) ராயபுரம் மண்டலத்தில் உள்ள சென்னை என்விரோ நிறுவனத்தின் கட்டளைக் கட்டுப்பாட்டு மையத்தில் தொடங்கப்பட்டது.

இம்முயற்சியானது மூன்று மாதங்களில் 10 ஆயிரம் பள்ளி மாணவர்களிடம் தொடர்ச்சியான விழிப்புணர்வு வழியாக குப்பைகள் தரம்பிரித்தல் குறித்தும், அன்றாட வாழ்வில் அதன் முக்கியத்துவம் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் புரிதல் ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம், பொறுப்பான கழிவு மேலாண்மையை அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு, கடைப்பிடிக்க ஊக்குவிக்கப்படுவார்கள்.

மாணவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம்

இதன் ஒரு அங்கமாக, ராயபுரம் கல்லறைச் சாலை பகுதியில் அமைந்துள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்கள் வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், முன்னிலையில் சென்னை என்விரோ நிறுவனத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டு சென்னையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற திடக்கழிவு மேலாண்மை செயல்முறைகள் குறித்து அறிந்து கொண்டனர்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, தங்கள் பெற்றோரை ஊக்குவித்து தங்கள் வீடுகளிலும் குப்பைகளை நான்கு வகையாக தரம்பிரித்து, அப்புகைப்படங்களை வாட்ஸ் ஆப் செயலியில் பகர்ந்து குப்பை தரம்பிரித்தலை உறுதி செய்யும் மாணவர்கள் "Source Segregation Heros" என அங்கீகரிக்கப்படுவர். மூன்று மாத முடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கப்பட்டு கவுரவிக்கப்படுவர்.

இந்நிகழ்ச்சியில் மண்டல அலுவலர் சத்திய நாராயணன், சென்னை என்விரோ நிறுவன திட்ட அலுவலர் பரிசுத்தம் வேதமுத்து மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT