சென்னை,
ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துகளை மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
ஏர்முனை முதல் அதிநவீன கணினி வரை - நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு கருவியும் நமது குடும்பத்தை வாழவைத்து, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் உன்னத உந்துசக்தி!
நாம் செய்யும் தொழிலை போற்றி, வாழ்வாதார கருவிகளுக்கு நன்றி செலுத்தும் ஆயுத பூஜையையும், அறிவையும் கலைகளையும் வணங்கும் சரஸ்வதி பூஜையையும், புதிய முயற்சிகளில் வெற்றியை தேடித்தரும் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம்.
"வியர்வை சிந்தி உழைக்கும் கரங்களே சமூகத்தின் உண்மையான பலம்." உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் சிறக்கவும், தொழில்கள் தடையின்றி மேன்மையடையவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் புதிய தொடக்கங்கள் அனைத்தும் வெற்றியில் முடியவும் மனதார வாழ்த்துகிறேன்.
உழைக்கும் சொந்தங்கள், பாட்டாளிகள், வணிகர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.