தமிழக செய்திகள்

பிறந்து சில மணி நேரத்திேலேயே ஆண் சிசு குப்பையில் வீச்சு: தெருநாய்கள் கடித்து குதறியதால் பரபரப்பு

சிசுவின் உடலுக்கு அருகே ரத்தக்கறை படிந்த பை கிடந்தது.

திருப்பூர்,

திருப்பூர் மத்திய பஸ் நிலையம் அருகே குப்பை குவியலில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசுவின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் சிசு

திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரே தினசரி மார்க்கெட் கட்டிட வளாகம் உள்ளது. அதற்கு முன்புறம் நூலக கிளை அலுவலகம் அமைந்துள்ளது.

நேற்று மதியம் 12 மணி அளவில் அந்த வழியாக சென்ற துப்புரவு பணியாளர்கள், நூலகம் எதிரே கிடந்த குப்பை குவியலில் ஈக்கள் அதிகம் மொய்த்தபடியும், தெருநாய்கள் சுற்றித்திரிந்ததையும் கவனித்தனர். அதன் அருகில் சென்று பார்த்தபோது பழைய மெத்தை கிடந்தது. அதற்குள் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு உடல் ரத்தக்கறையுடன் கிடந்தது.இதனைக்கண்டு துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பே ரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். இதில், நாய்கள் கடித்து குதறியதில், அந்த சிசுவின் 2 கால்கள் உள்ளிட்டவை இல்லை. இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் கண் கலங்கினார். சிசுவின் உடலுக்கு அருகே ரத்தக்கறை படிந்த பை கிடந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த குழந்தை பிறந்து இருக்கலாம் என்றும், இறந்ததால் சிசுவை பையில் வைத்து குப்பையோடு குப்பையாக வீசி சென்று இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

விசாரணை

இதையடுத்து ஆம்புலன்சை வரவழைத்து, சிசுவின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிசுவின் உடலை பையில் வைத்து வீசி சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT