தென்காசி,
தென்காசி மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவ்விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையோர பகுதிகளில் சுற்றித்திரிவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், குற்றாலம் காப்புக்காடு அருகிலுள்ள மலையடிவார பகுதியில் நேற்று காலை தாயை பிரிந்த ஆண் குட்டி யானை ஒன்று வழிதவறி அங்குமிங்கும் சுற்றித்திரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், வன கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் சாந்தகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் குட்டி யானையை லாவகமாக பிடித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையில், குட்டியை பிரிந்த யானைக் கூட்டம் அதே பகுதியில் சுற்றித்திரிவது தெரியவந்தது. இதையடுத்து, எந்தவித விபரீதமும் ஏற்படாமல் இருக்க குற்றாலம் காப்புக்காடு அருகே மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரிந்த குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்ப்பதற்காக இரண்டு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு வரை வனத்துறையினர் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
குட்டி யானையை தேடி தாய் யானை தனது கூட்டத்துடன் வரக்கூடும் என்பதால், வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.