கோவை,
கோவை, பாலக்காடு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் ‘ஈ-கோலை’ பாக்டீரியா கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து மத்திய தணிக்கை குழு(சி.ஏ.ஜி.) ஆய்வு மேற்கொண்டது. இதன்படி ரெயில் நிலையங்களில் உள்ள குடிநீர் குளிரூட்டிகள், நடைமேடைகளில் உள்ள குடிநீர் குழாய்களில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில், பல்வேறு ரெயில் நிலையங்களின் குடிநீரில் பாக்டீரியா இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கோவை, பாலக்காடு, ஐதராபாத் உளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் ‘ஈ-கோலை’(E-coli) எனப்படும் பாக்டீரியா கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
ரெயில்வே விதிமுறைப்படி குடிநீரின் தரத்தை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் என்ற போதிலும் பல மாதங்களாக எந்த ஒரு தர கட்டுப்பாட்டு சோதனையும் நடத்தப்படவில்லை என தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் நீர் சுத்திகரிப்பு மையங்கள் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் தென்னக ரெயில்வே உடனடியாக தலையிட்டு குடிநீர் ஆதாரங்களை சுத்திகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.