நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தெப்பக்காடு முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வளர்ப்பு யானைகள் முகாமில், 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலையில் அனைத்து வளர்ப்பு யானைகளும் வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகின்றன. பின்னர், மாலையில் முகாமுக்கு திருப்பி அழைத்து வரப்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தாய் யானையால் கைவிடப்பட்ட ஒரு குட்டி யானை முதுமலை வனச்சரகத்தில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் நின்று கொண்டிருந்தது. அப்போது ஒரு மாத குட்டியாக இருந்த அந்த யானை அங்கிருந்து மீட்கப்பட்டு, தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், 2016-ஆம் ஆண்டு அந்த யானை திருச்சியில் உள்ள சமயபுரம் கோவிலுக்கு அனுப்பப்பட்டது.
கோவிலில் அந்த யானை, தன்னை பராமரித்து வந்த பாகனை திடீரென தாக்கியது. இச்சம்பவத்தில் அவர் உயிரிழந்தார். அதன்பின், மசினி யானை மீண்டும் முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு, தெப்பக்காடு முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அப்போது மாயாற்றில் யானைகள் குளிக்க வைக்கப்படும்; பின்னர் சத்தான உணவுகள் வழங்கப்படும். அதன்பின் ஓய்வுக்காக வளர்ப்பு யானைகள் அழைத்து செல்லப்படும். இந்த நிலையில், நேற்று மாலை மசினி என்ற வளர்ப்பு யானையை ஆற்றில் குளிப்பாட்டிவிட்டு, பாகன் பொம்மன் (வயது 45) அழைத்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மசினி திடீரென ஆக்ரோஷமடைந்து பொம்மனை தாக்கியது. இந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார். இதை பார்த்த சக பாகன்கள் ஓடிவந்து, போராடி யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், படுகாயமடைந்த பொம்மனை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.