சென்னை,
ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இறை நம்பிக்கை, இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம், தியாகத்தைப் போற்றும் வகையில் இஸ்லாமிய மாதமான துல்ஹிஜ்ஜின் 10ம் தேதி இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு தனது மகனை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.
சென்னையிலும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதல் சிறுவர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர். சென்னை பெரம்பூர், ஓட்டேரி, ராயபுரம், புரசைவாக்கம், அண்ணாநகர், ஐஸ் அவுஸ், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட சென்னை முழுவதும் உள்ள மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கு பகுதியான மேலப்பாளையத்தில் அதிகாலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடைகள் உடுத்தி தொழுகையில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.