தமிழக செய்திகள்

விறுவிறுப்பாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு - இன்ஸ்பெக்டர் உள்பட 29 பேர் காயம்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நேற்று நடந்தது. போட்டியின் போது இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 29 பேர் காயம் அடைந்தனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் பாலமேட்டில் சிறப்பு வாய்ந்த ஜல்லிக்கட்டு விழா நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இந்த போட்டியை காண மதுரை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அதிகாலையிலேயே வந்திருந்து அங்குள்ள கேலரியில் இடம் பிடித்து அமர்ந்தனர்.

இதில் கலந்து கொள்ள வந்த காளைகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் களத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டன.

காலை 8 மணிக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் என அனைவரும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பச்சை கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

வேடிக்கை காண்பித்த காளைகள்

முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பின்னர் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வீரர்களுக்கு பச்சை, மஞ்சள், ஊதா உள்ளிட்ட பல நிறங்களில் பனியன் வழங்கப்பட்டிருந்தன. ஒரு மணி நேரத்திற்கு 75 வீரர்கள் வீதம் களத்தில் இறக்கி விடப்பட்டனர். சீறி வந்த காளைகளின் திமில்களை பிடித்து வீரர்கள் அடக்க பாய்ந்தனர்.

போட்டியில் சில காளைகள் சுழன்று வந்து வீரர்களை சிதறடித்ததுடன், வேடிக்கையும் காண்பித்தது. அப்போது காளையர்கள் போக்கு காட்டிய காளையையும் விரட்டி விரட்டி சென்று பிடித்தனர். மேலும் காளைகளின் வால், கொம்புகளை பிடிக்கக்கூடாது என மாடு பிடி வீரர்களுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கப்பட்டது. அந்த விதிமுறைகளை மீறியவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

காளைகள் வெளியேறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் லேசான தடியடியும் நடத்தப்பட்டது. அதேபோன்று காளைகளை கொண்டு வரும் இடத்திலும் கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

மேலும் போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேறிய காளை ஒன்று மாணிக்கம்பட்டி விலக்கில் உள்ள ஒரு பள்ளத்தில் தவறி விழுந்தது. அந்த காளையை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காப்பாற்றினார்கள்.

மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மொத்தம் 674 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 600 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

காளைகளை திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் தங்க, வெள்ளி காசுகள், சைக்கிள், கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியின் முடிவில் 18 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக முதல் பரிசை, மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் (வயது 25) பெற்றார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசை 17 காளைகளை அடக்கிய பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரனுக்கு கொடுக்கப்பட்டது. 10 காளைகளை அடக்கிய டி.மேட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திக் 3-வது பரிசு பெற்றார். அவருக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 12 மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் 7 பேர், 9 பார்வையாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன் ஆகிய 29 பேர் காயம் அடைந்தனர். அதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT