தமிழக செய்திகள்

திருவண்ணாமலை கோவிலுக்குள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை

பக்தர்கள் செல்போன் எடுத்து செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலுக்குள் உள்ளே செல்போன்கள் எடுத்துச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இணை ஆணையர் தகவல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலுக்குள் உள்ளே செல்போன்கள் எடுத்துச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் செல்போன் எடுத்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

5 இடங்களில் செல்போன் பாதுகாப்பு மையம்

மேலும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்து செல்ல ஏதுவாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகில் 2 இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் 2 இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ரூ.5 கட்டணமாக செலுத்தி ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக் கொள்ளலாம்."

போலீசாரின் மூலம் நடவடிக்கை

மேலும், "இந்த உத்தரவினை மீறி கோவிலுக்குள் மறைமுகமாக எடுத்துச் செல்லும் செல்போன்களை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.