தமிழக செய்திகள்

விமானங்களில் தரம் குறைந்த ‘பவர்பேங்க்’ எடுத்துச்செல்ல தடை

சென்னை வந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை,

சென்னை வந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், இனி விமானங்களில் தரம் குறைந்த 'பவர்பேங்க்' எடுத்துச்செல்ல விமான பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது.

விமானத்தில் தீ

டெல்லியில் இருந்து கடந்த 11-ந்தேதி 180 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் உள்பகுதியில் பொருட்கள் வைக்கும் கேபினில் திடீரென தீ விபத்து ஏற்பட் டது. இதையடுத்து விமானம் ஐதராபாத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் 180 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விமான பாதுகாப்பு துறையினர் நடத்திய விசாரணையில், பயணி ஒருவர் வைத்திருந்த 'பவர் பேங்க்' தான் தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. அந்த 'பவர்பேங்க்' போதிய பாதுகாப்பு இல்லாத வகையைச் சேர்ந்தது என்றும் கண்டறியப்பட்டது.

'பவர்பேங்க்'கிற்கு தடை

இதையடுத்து, மொபிகின்ஸ் எம்.கே.-பி.பி.-04 மாடல் 'பவர் பேங்க்' இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்களில் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கைப்பை, செக்கின் பேக்கேஜ் மட்டுமின்றி, சரக்கு விமானங்களிலும் இதனை எடுத்துச் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட் டுள்ளது.

இந்த தடை சென்னை விமான நிலையத்திலும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். மேலும், பயணிகள் தரமான 'பவர் பேங்க்'குகளை விமானத்தின் உள்ளே எடுத்துச் செல்லும் கைப்பையில் மட்டுமே வைக்க வேண்டும். விமானத்தில் ஏற்றுவதற்காக ஒப்படைக்கும் பயணப்பெட்டியில் வைக்கக்கூடாது என்றும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT