தமிழக செய்திகள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் சினிமா பாடல்களுக்கு தடை: கோவில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் மேளம், நாதசுரம் உள்ளிட்ட அம்பாளுக்குரிய பாரம்பரிய இசைக்கருவிகளை இசைக்க மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பேண்ட் செட், நவீன இசைக்கருவிகளைக் கொண்டு சினிமா பாடல்கள் வாசிப்பதற்கும், நடனமாடுவதற்கும் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள உலகப்புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனைத் தரிசித்து வருகின்றனர்.

சூரசம்ஹாரம்

திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தைக் காணவும், 10-ம் திருநாளை முன்னிட்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கோவில் வளாகத்தில் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைக்க அனுமதி

இந்த நிலையில், தசரா திருவிழாவின் புனிதத்தன்மையைப் பேணிக்காக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் மேளம், நாதசுரம் உள்ளிட்ட அம்பாளுக்குரிய பாரம்பரிய இசைக்கருவிகளை இசைக்க மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா பாடல்களை இசைக்க அனுமதி இல்லை

மேலும், பேண்ட் செட் மற்றும் இதர நவீன இசைக்கருவிகளைக் கொண்டு சினிமா பாடல்களை இசைப்பதற்கும், அந்தப் பாடல்களுக்கு ஏற்ப கோவில் வளாகத்தில் நடனமாடுவதற்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

எனவே, கோவில் நிர்வாகத்தின் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அதற்கேற்ப தங்களது நேர்த்திக்கடன்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு பக்தர்களும் தசரா குழுவினரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT