தமிழக செய்திகள்

தமிழகத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் தொடரும் என்று அரசு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

சென்னை,

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் வகையிலான புகையிலைப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துத் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் மூலமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த விதியின்படி, பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையானது மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டு, வரும் 2027-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு பணிகள்

இந்தத் தடையை மீறி எவரேனும் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற போதைப் பொருட்களைத் தயாரித்தாலோ, கடத்தினாலோ அல்லது பதுக்கி வைத்து விற்பனை செய்தாலோ அவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாயும் என்றும், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் தொடரும் என்றும் அரசு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.