நீலகிரி,
முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய வாழ்விட சுற்றுலா பகுதிகளில் வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பல்வேறு வனவிலங்குகளுடன், 260 வகையான பறவையினங்களும் உள்ளன. மேலும், ஆசியாவின் மிகப்பெரிய வளர்ப்பு யானைகள் முகாமும் இங்கு அமைந்துள்ளது.
முதுமலைக்கு வளர்ப்பு யானைகளை காணவும், வனப்பகுதிக்குள் வாகன சவாரி செல்லவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். வனத்துறை சார்பில் ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த நிலையில், மைய வாழ்விட சுற்றுலா பகுதிகளில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுமலை வனச்சரகர் யுவராஜா கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மைய வாழ்விட சுற்றுலா மண்டலங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவாரி செல்லும் பார்வையாளர்கள் தங்களது செல்போன்களை சவாரி வாகனங்களில் பாதுகாப்பாக ஒப்படைத்து, பயணம் முடிந்த பின்பு பெற்றுக்கொள்ளலாம். பார்வையாளர்களின் ஒருமித்த ஆதரவே வனவிலங்குகள் பாதுகாப்புக்கு பெரும் உதவியாக இருக்கும்” என்றார்.