கோவில்பட்டி,
தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கோவில்பட்டி பார்க் ரோட்டில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை உணவாக இட்லி, பொங்கல் வழங்கப்படுகிறது. ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், பொங் கல் 5 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த உணவகத்தில் காலை 7 மணியிலிருந்து காலை உணவு விநியோகம் தொடங்கும்.
மதியம் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் வழங்கப்படுகிறது. காலை 12 மணியிலிருந்து மதிய உணவு விநியோகம் தொடங்கும். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக காலை 7.30 மணிக்கே இட்லி அனைத்து காலியாகிவிடுவதாக அம்மா உணவக ஊழியர்கள் கூறியதால், வரிசையில் காத்திருந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் அம்மா உணவகத்தில் தயார் செய்யப்படும் 1,200 இட்லிகள் அரை மணி நேரத்துக்குள்ளாக எப்படி காலியாகும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
இங்கு தயாரிக்கப்படும் இட்லிகள் தனியார் ஓட்டல்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரு ரூபாய்க்கு வாங்கப்படும் இட்லிகள் ஓட்டல்களில் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று நகராட்சி ஆணையாளர் சுகந்தி அம்மா உணவகத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், சிலர் வீடுகளில் உள்ள வயதானவர்களுக்கு பாத்திரங்களில் பார்சல் வாங்கி சென்றுள்ளனர். மற்றபடி எந்த தவறும் நடக்கவில்லை, என்றார். மேலும், இனிமேல் அம்மா உணவகத்தில் யாருக்கும் பார்சல் கொடுக்க வேண்டாம் என்று ஊழியர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று நெல்லை மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் காலையில் கோவில்பட்டி அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவகத்தில் டோக்கன் வழங்கும் கவுண்ட்டர் இட்லி உள்ளிட்ட உணவு வழங்கும் கவுண்ட்டர்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த உணவகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களிடமும் விசாரித்தார்.
அப்போது, அம்மா உணவகத்தில் யாருக்கும் உணவுகளை பார்சல் கொடுக்க அனுமதி கிடையாது. இங்கு சாப்பிடுவதற்கு மட்டுமே அனுமதி உண்டு. இனிமேல் யாருக்கும் எக்காரணம் கொண்டும் உணவுகளை பார்சல் தரக் கூடாது என ஊழியர் களுக்கு அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து, கோவில்பட்டி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பார்சல் தடைக்கு பின் அம்மா உணவத்தில் இட்லி பார்சல் வழங்காததால், காலை 9.30 மணி வரை மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.